Sunday

சினிமா விமர்சனம் - Donnie Darko (2001)




"நான் மட்டும், அன்னிக்கே இப்படி செஞ்சிருந்தேன்னா, இன்னிக்கு இப்படி நடந்திருக்காது" - இது நம்மில் பல பேர் பல முறை சொல்லியிருக்கக்கூடிய ஒரு டயலாக். இதை "காலம்" சொல்ல நேர்ந்தால்...? இதற்கே குழம்பினால் எப்படி? "டானீ டார்க்கோ" பாருங்கள், தலை சுற்றும். சமீபத்தில் எந்த படம் பார்த்தும் இப்படி யோசித்ததில்லை, நான். இரண்டு முறை படம் பார்த்த பின்னும் நெட்டில் இதைப்பற்றிய விளக்கங்களை தேடிப் படிக்க வேண்டியிருந்தது. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் படம் 2001-இல் வெளி வந்திருக்கிறது. Time Travel படங்கள் என்றாலே, ஒரு வயதான வெள்ளை தாடி விஞ்ஞானியும், மற்றும் இருவரும் "கி.பி.1800-க்கு போகலாம்" என்று கிளம்புவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப்படத்தை, அதைப்போன்ற க்ளீஷேக்கள் ஏதுமில்லாமல், கிராஃபிக் மாயாஜாலங்கள் இல்லாமல், ஒரு திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுத்திருக்கிறார்கள். மேலும், இதை ஒரு Time travel பற்றிய படம் என்று சொல்வதை விட, Parallel universe பற்றிய படம் என்று சொல்லலாம்.

* Warning : Spoilers *
(இந்த விமர்சனத்தை கதை சொல்லாமல் எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியாததாலும், இதைப் படித்துவிட்டு பார்த்தாலும், படம் முதல் தடவையில் புரிந்துவிடாது என்ற அபரிமித நம்பிக்கையாலும் :-) )

ஒரு அக்டோபர் 2-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு, யாரோ எழுப்பியது போல் இருக்கவே, தூக்கத்திலேயே நடந்து வெளியே செல்கிறான் டானி. இரவு முழுவதும் கால்ஃப் மைதானத்தில் உறங்கி விட்டு காலை எழுந்து வீட்டுக்கு வரும் டானி, தன் அறையில் பெரிய ஜெட் எஞ்ஜின் விழுந்து கிடப்பதை பார்க்கிறான். இதைத் தொடர்ந்து, இரவில் எழுப்பி தன்னை காப்பாற்றிய அந்த உருவத்தை அடிக்கடி சந்திக்க ஆரம்பிக்கிறான். அது செய்ய சொல்பவை எல்லாவற்றையும் செய்கிறான். தன் பள்ளியின் தண்ணீர் குழாயை உடைத்து பள்ளியில் வெள்ளம் வரச்செய்வது, ஒரு எழுத்தாளரின் வீட்டை எரிப்பது உட்பட. இதிலிருந்து படம் முடியும் வரை மண்டையை பிய்த்துக்கொள்ள வைக்கிறார்கள் (Its a compliment :-)).

அண்டவெளியில் (விளக்க முடியாத ஒரு காரணத்தினால்), காலத்தில் ஏற்படும் ஒரு கோளாறினால், சமநிலை பதிக்கப்பட்டு, எதிர் காலத்திலிருந்து ஒரு ஜெட் எஞ்சின் தவறி நிகழ்காலத்தில் விழுந்து விடுகிறது. இதனால் ஏற்படும் குளறுபடியை சரி செய்யும் வரை, உலகம் இந்த 28-நாட்களுக்குள் முடிவிலா சுழற்சியில் (indefinite loop) சிக்கி கொள்கிறது. அதாவது Primary Universe-இலிருந்து காலம் விலகி, Tangent Universe-இல் விழுந்து விடுகிறது. இதை சரி செய்ய முயற்சி செய்து பல முறை டானி தோற்றிருக்கலாம் அல்லது முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு தடவையும், Tangent Universe அக்டோபர் 2-ந் தேதிக்கு reset ஆகிறது. டானி வெற்றி பெற்ற ஒரு தடவைதான் நம் திரைப்படத்தின் கதை.

இந்த (time travelling கான்செப்டில், artifact என்று அழைக்கப்படும்) எஞ்சினை பழையபடி அண்டத்தின் கருந்துளையில் செலுத்துவதின் மூலமே, இதனை சரி செய்ய இயலும். இதனை செய்ய டானிக்கு manipulated dead எனப்படும் இணை உலகில் இறக்கும் காரெக்டர்கள் உதவுகின்றன. இவை அனைத்தையும் புரிந்து கொள்ள 102 வயது ஸ்பேரோ எழுதிய 'Philosophy of Time Travel' என்ற புத்தகம், அவனுக்கு உதவுகிறது. (இது எல்லாம், படத்தை 2 முறை பார்த்து பின் நெட்டில் இதைப் பற்றி படித்த பிறகுதான் புரிகிறது :-))

இந்த கதைக்கு நடுவில் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவாத போலியான தற்கால கல்வி முறையைச் சாடுகிறார்கள். தன்னம்பிக்கை, சுய முன்னேற்ற எழுத்தாளர்களை நக்கலடிக்கிறார்கள். டானிக்கும், க்ரெட்சனுக்குமிடையேயான அழகான காதலைச் சொல்கிறார்கள். இருவருக்குமிடையே இயல்பாக மலரும் அந்த முதல் முத்தக் காட்சி அருமை. சயின்ஸ் ஃபிக்க்ஷன் கதையினூடே மனித உறவுகளுக்கிடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகளையும் இணைத்திருப்பதால், சாத்தியமில்லாத ஒரு கதையை பார்ப்பது போன்றான உணர்வு தவிர்க்கப்படுகிறது. படம் முழுதுமே இழையோடும் டானியின் மெல்லிய சோகம் நம்மையும் பற்றிக் கொள்கிறது.

ஜேக் ஜில்லனால், ஒரு மனநிலை தடுமாறிய ஈமோவாகிய டானி வேடத்தில் பின்னியெடுத்திருக்கிறார். அவருடைய அந்த சிரிப்பு பல காட்சிகளில்
பயமுறுத்துகிறது. மேலும் கேமிராவும், இசையமைப்பும் சிறப்பாக வந்திருக்கின்றன. 'Mad World' பாடல் அருமை. படத்தின் பெரிய பலம், நம்மை சிந்திக்க வைப்பதுதான். பல காட்சிகளை வெளிப்படையாக விவரிக்காமல் பார்வையாளர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறார்கள்.

புத்திசாலித்தனமான படங்களை வரவேற்கும் ஹாலிவுட்டிலேயே இந்தப் படம் ஒரு flop. ஆனால் DVD யில் பெரிய ஹிட்டாகி இப்பொழுது ஒரு கல்ட் சினிமாவாகிவிட்டது. ஒரு வித்தியாசமான படத்தைப் பார்க்கும் ஆர்வமும், பார்த்தபின் இரண்டு நாட்களுக்கு இதைப் பற்றி சிந்திக்கும் பொறுமையும் இருந்தால், கட்டாயம் "Donnie Darko"பாருங்கள்.

2 comments:

said...

நல்லா இருந்துச்சு ;-)... இதே மாரி இன்னோரு படம் இருக்கு - united states of leland. அதுலயும் ஜேனா மலோன் ;-)...

said...

//அதுலயும் ஜேனா மலோன் ;-)...

அடடா! படத்தின் முக்கிய அம்சமான ஜேனா மலோனை குறிப்பிட எப்படி மறந்தேன் :-)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது