"SKYWALK" என்றொரு திரில்லோற்சவம்
US வந்ததிலிருந்து நயாகராவுக்கு அடுத்தபடியாக பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தது, Grand Canyon. ஒரு வழியாக கடந்த வாரம் அந்த ஆசை நிறைவேறியது. Grand Canyon முழுவதுமே இயற்கையின் தாண்டவம்தான் என்றபோதிலும், இந்த முறை நாங்கள் மலைத்துப்போனது, புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் Skywalk-ஐப் பார்த்துதான்.
தரையிலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில், ஒரு சிகரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கிறது, "Skywalk" என்றழைக்கப்படும் இந்த 'U' வடிவப் பாலம் (இதை பாலம் என்று அழைக்க முடியாது. எனவே, நடைபாதை என வைத்துக்கொள்ளலாம்). இதன் சிறப்பு என்னவெனில், நடக்கும் தளம் முழுவதும் அடுத்த பக்கம் தெரியக்கூடிய கண்ணாடியால் அமைக்கப்பட்டிருப்பதுதான்.

முதல் அடி எடுத்து வைத்ததும் காலுக்குக் கீழே தெரியும் 4000 அடிப்பள்ளம் மயிர்க்கூச்செரிய வைக்கிறது. கொஞ்சம் தைரியம் வந்ததும் வேகமாக நடக்கத் தொடங்கினோம் நாங்கள். ஆனால் உள்ளே காலடி வைத்ததும் ஏற்பட்ட அந்த அனுபவமும், கீழே பார்த்துக் கொண்டே நடக்கும் அந்த த்ரில்லும் உண்மையிலேயே வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது.

சில பேர் பயத்தில், பாலம் முழுவதுமே ஓரமாக கம்பியைப் பிடித்துக் கொண்டு, கண்ணாடி இல்லாத தளத்தில் நடந்து வந்தார்கள். பாய் ஃப்ரண்ட் கையைப் பிடித்துக் கொண்டு நடுங்கிக் கொண்டே வந்த பெண், தைரியமாக கண்ணாடியில் குப்புற படுத்துக் கொண்ட 4 வயது குழந்தை (இளங்கன்று பயமறியாது?) என்று சுவாரசியத்துக்கு பஞ்சமேயில்லை. அதுவும் வெளியேயிருந்து பார்க்கும் போது, அனைவருமே எதோ கம்பியில் நடப்பது போல் நடந்து கொண்டிருந்தது, பார்க்க சரியான காமெடி.
நடு தளத்திற்கு வந்த நாங்கள் (5 பேர்) ஒன்றாக குதிக்கவும், சுற்றியிருந்தவர்கள் "Dont do it,Dont do it" என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலரிடம், அங்கிருந்த செக்யூரிட்டி, கண்ணாடிகள் அனைத்தும் ஜெர்மனியிலிருந்துதான் தருவிக்கப் பட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்.
இதில் வரும் வருமானம் அனைத்தும் (நுழைவுக் கட்டணம் மிகவும் அதிகம்!) சிவப்பிந்திய பழங்குடிகளுக்கு போவதாக சொன்னார்கள். படகில் சென்றபோது எங்களுக்கு படகோட்டிய சிவப்பிந்தியர் ஒருவர், நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்று சொன்னவுடன், "We are Brothers,We are Brothers" என்று கூவினார். (அடப்பாவி, ஒருகாலத்தில் கொலம்பஸ் சொன்னாருங்கறதுக்காக நீயும், நானும் 'பாய், பாயா' ?)
Skywalk-ன் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை (பாதுகாப்பு காரணங்களுக்காக) என்பதுதான் குறையாக இருந்தது.வாய்ப்பு கிடைத்தால், தவறாமல் சென்று வரவேண்டிய இடம் இந்த Skywalk. இந்த இடத்தைப் பார்க்கும்பொழுது இதுதான் தோன்றியது.
"வானத்திற்கும், பூமிக்குமிடையில், புத்தியை நீட்டியிருக்கிறான், மனிதன்!!!".

5 comments:
கட்டுரை சூப்பர் பிரசன்னா.
'நாச்சியார்' மூலம் இங்கே வந்தேன்.
fantastic ,Prasanna.
it is really great.
Ohhhh.am I sorry I missed this out.!!
but if they are charging so much money for evey occasion, I do not know know how everyone
can afford to go anywhere?
thank you so much for completing my journey to GrandCanyon.
வருகைக்கு நன்றி வல்லி அவர்களே. ஆம், கட்டணம்தான் அதிகம். சிறிது நாட்கள் சென்றவுடன் குறைக்கப்படலாம் என்று நினைக்கிறேன்.
//thank you so much for completing my journey to GrandCanyon.//
I am glad you liked it.
//கட்டுரை சூப்பர் பிரசன்னா.
'நாச்சியார்' மூலம் இங்கே வந்தேன்.
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி துளசி அவர்களே.
wow!
--புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை (பாதுகாப்பு காரணங்களுக்காக) ---
ஏன்... கீழே குதித்து விடுவார்கள் என்பதாலா?
//ஏன்... கீழே குதித்து விடுவார்கள் என்பதாலா?
பாபா :-)
எந்த பொருட்களுக்கும் (கேமிரா உட்பட) அனுமதி இல்லை. இவற்றை கீழே தவற விட்டு கண்ணாடியில் கீறல்கள் விழும் என்பதால்.
Post a Comment