காலம் பற்றிய குறிப்புகள்
காலம் பற்றிய குறிப்புகள்
~~~~~~~~~~~~~~~~
உனக்கும் எனக்கும்
இருப்பது போலவே,
'காலத்திற்கும்' பெயர் வைக்கிறோம்.
நாள் என்றும் வருடம் என்றும்
திங்கள் என்றும் செவ்வாய் என்றும்.
என்ன செய்துவிட முடியும்?
மற்றுமொரு ராமசாமி பிறந்தது
'திங்கள்' என்ற நாளிலும்,
இன்னொரு குப்புசாமியை புதைத்தது
'செவ்வாய்' என்ற நாளிலும்
என்று குறிப்பதைத் தவிர.
**********************************************************************************
கவிதைக்கான
வரிகளைத் தேடுதலில்,
மறுபடியும் தொலைத்தேன்,
வானவில்லை.
**********************************************************************************
ஒரு பாடலோ,
சினிமாவோ
கொளுத்திவிடுகிறது,
ஞாபகத்திரியை.
நிகழில் அடங்க மறுத்து
தூசி படர்ந்த புத்தகத்தின்
ஏதோ ஒரு பக்கத்தில்
ஒட்டிக்கொள்கிறது,
மனது.
கரையோரமிருந்து
ஆற்றுக்குள் தலை நீட்டும்
நாணல் நினைவுகளைப் பிடித்து
இறந்த காலக் கரையொதுங்க
எத்தனிக்கிறது, அது.
குழந்தைக்கு காட்டும் மிட்டாயைப்போல
எதை எதையோ காட்டி
லாயத்திலடைக்கிறேன்.
யாருக்குத் தெரியும்?
வெறுமை படர்ந்த இன்றைய பக்கமுங்கூட
எனை நோக்கிக் கை காட்டக்கூடும்,
ஒரு நாள்.
4 comments:
//மற்றுமொரு ராமசாமி பிறந்தது
'திங்கள்' என்ற நாளிலும்,
இன்னொரு குப்புசாமியை புதைத்தது
'செவ்வாய்' என்ற நாளிலும்
என்று குறிப்பதைத் தவிர.//
//கவிதைக்கான
வரிகளைத் தேடுதலில்,
மறுபடியும் தொலைத்தேன்,
வானவில்லை.//
//யாருக்குத் தெரியும்?
வெறுமை படர்ந்த இன்றைய பக்கமுங்கூட
எனை நோக்கிக் கை காட்டக்கூடும்,
ஒரு நாள். //
இந்த வரிகளை மிகவும் இரசித்தேன்.
நல்ல கவிதைகள்,
வாழ்த்துக்கள்!
வருகைக்கும் பாராட்டுக்கும், நன்றி சேரல்.
kalakku prasanna...! tamil la type panna mudiyalaa... :((
Thanks, Amizhthu. :-)
Post a Comment