அழைப்பிதழ்
நல்ல வெய்யிலில் விளைந்த அவனது வியர்வைக் கொடி, மண்டையிலிருந்து இறங்கி, அவனது பார்வையை மறைத்துக்கொண்டிருந்தது. கைகளால் அதனைத் துடைத்தவாறே விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தான், அவன். காலையிலேயே கிளம்பாமல் வாகனம் வேறு தகராறு செய்ததால் இவ்வளவு தூரம் நடக்க வேண்டியதாயிற்று. இன்று பார்த்து சிவா வேறு ஏகப்பட்ட அழைப்பிதழ்களை கொடுத்து இன்றே கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லியிருந்தான். இன்று விழித்த நேரமே சரியில்லை என்று தன்னைத் தானே நொந்து கொண்டு பட்டியலிலிருந்த ஒன்பதாவது முகவரியைப் படித்த பொழுதுதான், சரியான இடத்திற்கு வந்துவிட்டது புரிந்தது.
அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு கதவு திறந்தது. மெல்ல எட்டிப்பார்த்த அந்த மனிதரிடம், “இங்க, ராஜுன்றது...” என்று இழுத்தான். யோசித்து புருவத்தை உயர்த்தியதில் இரண்டும், ஐம்பது வயதுக்கானவை மூன்றுமாக அவரது அகன்ற நெற்றியில் கோடுகள் விழுந்தன. “நாந்தான், நீங்க யாரு? என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்றார் அந்த மனிதர். கொண்டு வந்திருந்த மஞ்சள் பையிலிருந்து அவர் பெயரிட்ட அழைப்பிதழை எடுத்தவாறே விஷயத்தை சொல்லி அவரிடம் நீட்டினான். இரண்டு நிமிடம் யோசித்தவர், “அப்படியா? பொண்ணு கல்யாணம் வச்சிருக்கேனே, வரமுடியாதுங்களே!” என்றார். எதோ சொல்ல வாயெடுத்தவனின் முகத்துக்கு எதிரே ‘படார்’ என்று கதவு அறைந்து சாத்தப்பட்டது.
தலையிலடித்துக்கொண்டு அடுத்த இடத்தை நோக்கி புறப்பட்டான். தாகத்தில் தொண்டை வரள ஆரம்பித்தது. பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் ஒரு இளநீர் வாங்கிவிட்டு கடைக்காரரிடம், “அண்ணே, மாணிக்கம் பிள்ளை தெரு எங்கண்ணே இருக்கு?” என்றான். “நேர போயி வலது கைப்பக்கம் திரும்புனீங்கன்னா, மொத சந்து, தம்பி” என்றார். காசை கொடுத்து விட்டு நகர்ந்தான்.
இந்த இடத்திலாவது பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டுமென்று நினைத்தவாறே அந்த சந்தில் நுழைந்தான். ஏழாம் எண் வீட்டில் கதவைத் தட்டியவுடன் திறந்த அந்த பெண் நல்ல களையாக இருந்தாள். “காவேரியை பார்க்கணும், கொஞ்சம் கூப்படறீங்களா”. “நாந்தான் காவேரி, என்ன விஷயம்” என்றவளை குழப்பமாக பார்த்தான். மிஞ்சிப் போனால், இருபது வயதுக்கு மேல் இருக்காது. மறுபடி அந்த காகிதத்தை எடுத்து முகவரியை சரி பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தது. அவளது அழைப்பிதழை எடுத்து கொடுத்துவிட்டு, அவள் படித்து முடிக்க காத்திருந்தான். பலவாறான சிந்தனைகளுடன் அதனை படித்து முடித்தவள், அவனை பார்த்தாள். நெற்றியில் தொடங்கிய பயத்தின் வண்ணங்கள் வேகமாய் பாய்ந்து காது மடல்களில் சிவப்பாக சிதறியிருந்தது. அழைப்பிதழை திருப்பி நீட்டியவள், “இல்லீங்க, அன்னிக்கு எனக்கு ஒரு நேர்முகத்தேர்வு இருக்கு, ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் ஒரு வாய்ப்பு வந்திருக்கு, என் குடும்ப நிலைமை உங்களுக்கு தெரியுமா, இல்லையானு எனக்கு தெரியல. இந்த வேலைக்கு போய் கொஞ்சமாவது பணம் சேர்த்து, நான் குடும்பத்துக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு” என்றவள், பதிலுக்கு கூட காத்திராமல் திரும்பி நடந்து கொண்டிருந்தாள்.
இப்பொழுது அவன் கொஞ்சம், கொஞ்சமாக நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருந்தான். சிவா சொன்னது சரிதானோ என்றுகூட அவனுக்கு தோன்றத்தொடங்கியிருந்தது. இருந்தாலும் அடுத்த இடத்தையும் பார்த்து விடுவது என்ற முடிவுடன் முகவரியை சரிபார்த்துக்கொண்டு கிளம்பினான். அவன் இருந்த இடத்திலிருந்து இன்னும் ஐந்து நிமிட நடை தூரத்தில் இருந்தது அந்த இடம். வேக வேகமாக நடந்தான். மிகவும் பெரிய இடமாகத்தோன்றியது. வாசலில் நின்றுகொண்டிருந்த பெரிய பெரிய அயல்நாட்டு வகை வாகனங்களையும், கூர்க்காவையும் பார்த்தவுடன் அவனது எண்ணம் உறுதியானது. கூர்க்காவிடம் பெயர் சொன்னவுடன் இந்த வீடுதான் என்று உள்ளே அனுப்பினான்.
வெளியே வந்த அந்தப்பெரியவரை பார்த்தவுடன், அவனுக்கு நம்பிக்கை வந்தது. அவருக்கு ஒரு எண்பது வயதிருக்கும். அவரது குடும்பத்தை பற்றி விசாரித்தான். பெரியவர், வாழ்க்கையில் நிறைய பணமும், முடியாத நேரங்களில் கொஞ்சம் அனுபவமும் சேர்த்திருந்தார். வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களில் இருந்த அவர், பெரிய கடமைகள் எதுவும் மிச்சம் வைக்காமல் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவராகத் தோன்றியது. அவரிடமும் மனனம் செய்திருந்த அதே வசனத்தை ஒப்பித்துவிட்டு, அழைப்பிதழை நீட்டினான், மறுக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன். ஆனால், வரமுடியாததற்கு அவர் கூறிய காரணத்தில் அவனுக்கு தலையே சுற்றியது. அந்த தனியார் தொல்லைக்காட்சியில் அந்த பிரபலமான தொடர் அன்றைய தினம்தான் முடியப்போவதாகவும், அதன் நாயகி கணவனுடன் சேர்ந்தாளா, இல்லையா என்று தெரியாமல் தான் வரமுடியாது என்றும் கூறிவிட்டார்.
அத்தனை பேருக்கும் நடுவில், சிவாவின் முன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், அவன். சிவா, “என்ன ஆயிற்று?” என்று கேட்டான். தான் எண்ணியது அத்தனையும் தவறு என்று ஒப்புக்கொண்டான் அவன். தனக்குள்ளே சிரித்துக்கொண்ட சிவா, “மனிதன் எந்த நிலையிலும் தான் கிளம்பும் நேரம் வந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொண்டு பூமியை விட்டு கிளம்ப தயாராக இருப்பதில்லை. ‘இன்னும் கொஞ்ச காலம்’ என்ற அவனது ஆசையும் அடங்குவதில்லை. ஆனால் நீயோ, விபத்து, வியாதி, வயோதிகம் போன்ற ஏற்பாடுகளைக் கொண்டு மனித உயிர்களை எடுத்துவருவதை வெறுப்பதாக கூறினாய். காரணத்தை எடுத்துக்கூறி அவர்கள் விருப்பப்பட்டால் அழைத்து வருவதாகவும், அவர்களே ஏற்றுக்கொண்டு உன்னுடன் வந்துவிடுவார்கள் என்றும் கூறினாய். இப்பொழுது புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைகிறேன். கவலைப்படாதே! இதை நீயாகவே உணர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் உனது இந்த யோசனையையே ஏற்றுக்கொண்டேன்.” என்றான்.
“முற்றிலுமாக உணர்ந்து கொண்டேன், சிவபெருமானே, என்னை மன்னித்துவிடுங்கள்” என்றுகூறியபடியே, தனது பாசக்கயிற்றை மறுபடி எடுத்துக்கொண்டு, எருமை வாகனத்திற்கு உடல் நிலை என்ன ஆயிற்று என்று பார்த்து வரக்கிளம்பினான், எமதர்மன்.
----------------------------------------------------------------------------------------
சர்வேசனின் 'நச்' கதைப் போட்டிக்கு எழுதப்பட்டது. என்னுடைய முதல் கதை முயற்சி :-)
28 comments:
Nice story and un-expected twist.
வித்தியாசமான கற்பனை.கதை நச்சுனு இருக்கு.
வாழ்த்துகள் ப்ரசன்னா. கதை நன்றாக உள்ளது. எதிர்பார்க்க இயலாத கற்பனை. :-)
Thanks Sunny.
மிக்க நன்றி, நக்கீரன்.
முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, பாலராஜன் கீதா.
Good one! :-)
நல்லாருக்கு. :) ரசிச்சேன். நல்ல கற்பனை.
Thanks for the comment CVR.
Thanks for the visit and the comment g.ra.
this is a perfect short story! you've started showing your prowess with short story as well..
kalakku machi... neraya ezhudhu... infact i did not visit your blog since long time and today got some real good write up...
Thanks for the encouraging comments, barath.
I've been checking your blog and waiting for update :-)
ரொம்பவே வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்
வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நந்து. உங்க கதையும் அருமை.
நல்லா வந்திருக்கு ப்ரசன்னா......நல்ல திருப்பம்....:):)
நன்றி ராதா. இப்படியெல்லாம் சொன்னா, நெறைய கதை எழுத ஆரம்பிச்சிடுவேன். ஜாக்கிரதை. :-)
ஆரம்பமே எமனை வைத்து ஆரம்பித்து இருக்கிறீர்கள் :) நன்றாக வந்து இருக்கிறது.
நேரம் இருந்தால் என் blog பக்கம் வந்து செல்லவும்
நன்றி, கார்த்திக். அவசியம் படிக்கிறேன்.
சூப்பர் நச்! இப்பதான் படிச்சேன்.
நல்லா வந்திருக்கு.
நன்றி, சர்வேசன்.
::))
ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி
::)) இதுக்கு என்ன அர்த்தம் சென்ஷி? :-)
வருகைக்கு நன்றி.
அருமை. ஏன் அழைப்பிதழை மறுக்கிறார்கள் என்று குழம்பி கடைசியில் விளங்கும்போது......
வாழ்த்துக்கள்!
திவா
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி, திவா.
வித்தியாசமான கற்பனைங்க
மிக்க நன்றி, நித்யா.
Good one, infact a great one to start with, the ending theme wuz interesting!! but somehow it reminds the Kumudam/ananda vigadan one page stories... :)) btw have a doubt too how do I post the blog in tamil ?
Cortigo, Thanks. Please refer,
http://tamilblogging.blogspot.com/
for tamil blogging.
Post a Comment