I am Legend (2007)
இந்தியாவில் பள்ளியிலோ கல்லூரியிலோ இருந்தவரை நான் பார்த்த அல்லது பார்க்கக் கிடைத்த அனைத்து ஹாலிவுட் படங்களும் ஒரேவிதமான கருவுடன்தான் இருந்தன. இப்படங்களில் எல்லாமே பூச்சி, வைரஸ், மிருகம் அல்லது அயல்கிரகத்துவாசிகளிடமிருந்து மனித இனத்துக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். தனியொருவனாகவோ, படையாகவோ அமெரிக்கர்கள் உலகைக் காப்பாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் எல்லா படங்களுமே இப்படித்தானோ என்று போரடிக்கத்தொடங்கியது. பிறகு ஓரளவு மற்ற படங்களைப் பற்றி படிக்க மற்றும் பார்க்கத்தொடங்கியதும்தான் எவ்வளவு நல்ல படங்களைத் தவற விட்டிருக்கிறோம் என்பது புரிந்தது. அதற்கு பிறகும், நல்ல விறுவிறுப்பான படமாக இருந்தாலும் இவ்வித திரைப்படங்களின் மேல் ஒரு ஒவ்வாமை நீடித்துக்கொண்டே இருக்கிறது, இன்றுவரை.
ஆனாலும் இந்த எனது முன்முடிவுகளையும், தாண்டி நேற்று பார்த்த “I am Legend” ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்தது. Will Smith நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர், Francis Lawrence.
சிறுவயதில், பள்ளி சென்றுகொண்டிருந்த காலத்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைக்காகவே காத்திருப்போம். காரணம், ‘சிறுவர் மலர்’ மற்றும் அதில் தொடராக வந்து கொண்டிருந்த ‘உயிரைத் தேடி’. எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. மிகவும் சுவாரசியமான தொடர் படக்கதை அது. கதை அப்படியே நினைவில்லை என்றாலும், பூமியிலுள்ள உயிரினம் மொத்தமும் அழிந்து போக, தப்பிய ஒரேயொரு சிறுவன் மட்டும் மற்ற உயிரினங்களைத் தேடி அலைவதுதான் கதை. வெறும் கதையை மட்டும் வைத்துப் பார்த்தால், ‘I am Legend’ - ம் கிட்டத்தட்ட அதேதான்.
வைரஸால் மொத்த மனித இனமும் அழிந்து போக New york நகரில் தனியொருவனாக அலைந்து திரியும் ராபர்ட் நெவல் மனித இனத்தை காப்பாற்ற மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார். தனியாளாக New York - ல் சுற்றித் திரிகிறார். இன்னும் யாரேனும் பிழைத்திருப்பார்களோ என்று தேடுகிறார்.
“The Last Man on Earth is not alone” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் tag line. வழக்கமான கதைதான் என்றாலும் விஷுவலில் மிரட்டியிருக்கிறார்கள். (கிராஃபிக்ஸ் மட்டும் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது). ஆள் அரவமற்ற, போக்குவரத்து நெரிசலில்லாத New York நகரத்தை பார்க்க கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.
இந்த வகையான மற்ற படங்களிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுவது, படத்திலுள்ள சின்ன சின்ன விஷயங்கள்தான். கடையிலுள்ள பொம்மைகளுடன் பேச முயன்று ராபர்ட் வெட்கப்படும் தருணங்கள், நாயைக் கொல்லும் இடத்தில் Will Simth-ன் முகபாவங்கள்(கொஞ்சம் ஓவர் செண்டிமெண்ட் :-)) என நிறைய.
படம் முடிந்தவுடன், ‘Children Of Men’ நினைவிற்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகத் தோன்றியது. மனித இனம் அழிந்தொழிந்து போகாமல் காப்பாற்ற முயலும் கதாநாயகர்கள், படத்தின் முடிவு என நிறைய. அங்கே Human Project என்றால், இங்கே ‘survivors colony’. (Children Of Men - உடன் ஒப்பிடும் அளவுக்கு இதில் சரக்கு இல்லை என்பது வேறு விஷயம்)
படத்தில் ஆங்காங்கே இருக்கும் லாஜிக் ஓட்டைகள் (யாருமே இல்லாத நியூயார்க் நகரத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் தண்ணீரும், மின்சாரமும் தடையின்றி கிடைப்பது போன்று), இடையில் வரும் சிறிது நேர தொய்வு போன்றவற்றை தவிர்த்து பார்த்தால், இரண்டு மணி நேர பொழுதுபோக்குக்கு ‘I am Legend’ உறுதியளிக்கிறது.
1 comments:
http://hollywoodpaarvai.blogspot.com/2008/03/i-am-legend-robert-neville.html
முடிவை மாத்திட்டானுக.. பார்த்தீங்களா?
Post a Comment