Monday

Into The Wild (2007)




"Into the wild" - Jon Krakauer எழுதிய புத்தகத்தை தழுவி sean penn இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம். Dead Man Walking படத்திற்கு இசையமைத்த Eddie Vedder இப்படத்திற்கும் இசை அமைத்திருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்தவுடன், தனது சேமிப்பு முழுவதையும் தானம் செய்துவிட்டு, உடைமைகளைத் துறந்து, விடுதலை விரும்பி அலாஸ்காவுக்கு பயணமான Christopher McCandless-ன் உண்மைக்கதை இது.

பெற்றோர்களுக்கு இடையேயான பிரச்சினையால் மனமுடையும் க்ரிஸ், யாரிடமும் சொல்லாமல் கிளம்புகிறான். கொஞ்சம் உணவுப்பொருட்கள், சில கேம்பிங் சாதனங்கள், நிறைய புத்தகங்கள் (காட்டில் சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்கள் பற்றியவை உட்பட) ஆகியவற்றுடன் அலாஸ்காவில் ஆள் அரவமற்ற இடத்தில் வாழத் தொடங்கும் க்றிஸ்-ற்கு, ஒரு பாழடைந்த பேருந்து வீடாக கிடைக்கிறது. மிருக வேட்டை, புத்தகம் என்று தனியாளாக வாழ்கிறான். இயற்கையை அரவணைக்கிறான்.

வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள் மற்றும், சம்பவங்கள் மூலமாக வாழ்க்கை குறித்த உண்மைகளை அவன் உணர்கிறான். அலாஸ்காவில் அவன் வசிக்கும் தருணங்களையும், இடை இடையே அலாஸ்கா வரும் வழியில் சந்தித்த சம்பவங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை சுவாரசியமாக இருக்கிறது. பயணம் தொடங்குவது முதலான கதையை, பிறப்பு, வாலிபம், குடும்பம் என்று பிரித்திருப்பது கவிதை. (புத்தகத்திலேயே இது இருந்ததா என்று தெரியவில்லை)

ஏன்? எதற்காக? போன்ற வாழ்க்கை குறித்த பல கேள்விகள் நமக்கு பல சமயங்களில் ஏற்படுவதுண்டு. ஆனாலும் நம்மில் பெரும்பான்மையோருக்கு இந்த சராசரி வாழ்க்கையை கடந்து யோசிப்பதற்கோ, முடிவெடுப்பதற்கோ தைரியம் வருவதில்லை. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் சாஃப்ட்வேர் படிக்கிறோம். நமக்கு தேவை இல்லை என்றாலும், பக்கத்து வீட்டுக்காரன் வாங்கியிருக்கிறான் என்பதால் 52" T.V வாங்குகிறோம். க்யூவில் நின்றாவது பர்கர் சாப்பிடுகிறோம். ஆனால், இவற்றை தைரியமாகத்துறந்து 'Career is twentieth century invention, i dont need one' என்கிறான் க்றிஸ்.

வழியில் சந்திக்கும் பல மனிதர்களில், க்றிஸ்-ஐ தத்தெடுத்துக்கொள்ள நினைக்கும் ஃப்ரான்ஸ் வரும் பகுதி, நெகிழ்வாக இருக்கிறது. ஃப்ரான்ஸாக நடித்திருக்கும் ஹால்ப்ரூக் கலங்க வைக்கிறார். படத்தில் மேலும் குறிப்பிடப்படவேண்டியவை கேமரா, இசை மற்றும் எமில் ஹிர்ஷ்-ன் நடிப்பு.

தனது அனுபவங்களின் முடிவில், 'Happiness is only real when it is shared' என்ற முடிவுக்கு வருகிறான் க்றிஸ். இதைக் கண்டுபிடிக்க அலாஸ்கா வரை போக வேண்டுமா? என்று கேட்கலாம். அல்லது சிலருக்கு க்றிஸ் -இன் செயல் வீர சாகசமாகத் தெரியலாம். எதுவாயிருப்பினும் க்றிஸ்-ன் எண்ணங்களைப் புரிந்து கொள்ளவும், நம்முடைய சிந்தனைகளை அவனுடையதுடன் தொடர்புபடுத்திக்கொள்ளவும் முடிபவர்களுக்கு, 'Into The Wild' நம்மால் வாழ்ந்துபார்க்க முடியாத ஒரு அற்புதமான அனுபவத்தைத்தருகிறது.

2 comments:

said...

ashok had told me about this and listening to just the story outline i felt it could be a depressing movie. Looks like it would be an interesting watch... not sure if i could get it here, will try...
keep writing "maattikitta" soopi!!

said...

Yes, this is an amazing movie. dont miss it.

and, sssshhhh.... :-)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது