Thursday

Sweeny Todd (2007) : குரோதத்தின் இசை





Movie : Sweeny Todd : Demon Barber of Fleet Street
Cast : Johny Depp, Helena Bonham Carter
Director: Tim Burton

Edward Scissorhands, Sleepy Hollow வரிசையில் Tim Burton, Johny Depp கூட்டணியில் வந்திருக்கும் அடுத்த படம், Sweeny Todd : Demon Barber of Fleet Street. புகழ்பெற்ற Broadway Musical - ஆன Sweeny Todd, இசைப்படமாக (Musical - க்கு தமிழ்ப்பதம் என்ன?) வெளிவந்திருக்கிறது. Chicago மற்றும் ஒரு சில படங்களைத் தவிர musical திரைப்படங்கள் அவ்வளவாகப் பார்த்ததில்லை என்றாலும், Crime Thriller மற்றும் Musical என்றபோது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றேன். வீணாகவில்லை.

நீலமும், சாம்பலும் கலந்த ஒரு வண்ணத்தின் பின்னணியில், அதிரும் இசையுடன், இயந்திரங்களில் இரத்தம் வழிந்தோட படம் தொடங்கும்போதே நமக்கு புரிந்துவிடுகிறது, இது என்ன மாதிரியான திரைப்படம் என்று. லண்டன் நகரில் அழகான மனைவி மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் முடி திருத்தும் கலைஞனான பெஞ்சமின் பார்கர் (ஜானி டெப்). அவனது மனைவியின் அழகே அவர்களுக்கு ஆபத்தாக அமைகிறது. அவளது அழகில் மயங்கி அவளை அடைய நினைக்கும் ஜட்ஜ் டர்பின், பெஞ்சமினை நாடு கடத்திவிட்டு அவனது மனைவியை தூக்கி செல்கிறான். பல வருடங்களுக்கு பிறகு லண்டன் திரும்பும் பெஞ்சமின், Sweeny Todd - ஆக அவதாரம் எடுக்கிறான். லண்டனில் பேக்கரி வைத்திருக்கும் Lovett - உடன் இணைந்து ஜட்ஜையும், மற்றவர்களையும் பழி தீர்க்கத் தொடங்குகிறான். இதற்கு இடையில் அவனது மகளையும் அடைய நினைக்கும் ஜட்ஜ், அவளது காதலன், lovett - க்கு துணையானக வரும் டோபி என்கிற சிறுவன் ஆகியோருடன் நகர்கிறது கதை.

படம் முழுவதும் பார்கர் கொலை செய்யும் விதமும், தெறிக்கும் இரத்தமும், அதன் வண்ணமும் உறைய வைக்கின்றன. ஒவ்வொருவரையாக பார்க்கர் கொன்று குவிப்பது, டோபி கடிக்கும் pie-ல் இருக்கும் மனித விரல் என படம் முழுவதும் குரூரத்திற்கு பஞ்சமில்லை. வஞ்சம் தீர்க்கும் பார்கரின் கொடூரத்தை காட்டவே இவை பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனாலும் இவை அனைத்தையுமே ரசிக்கும் விதமாக எடுத்திருப்பதில் வெற்றி பெறுகிறது, இத்திரைப்படத்தின் அழகியல். லண்டனின் இருண்ட சந்துகள், மனிதத்தன்மையற்ற வில்லன்கள் மற்றும் கதாநாயகன், கதாபாத்திரங்கள் பேசும் இங்கிலாந்தின் ஆங்கில உச்சரிப்பு என படம் ஒரு புத்தம் புதிய அனுபவத்தைத் தருகிறது.

இந்தப் படத்தின் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு அம்சம் இசையும், பாடல்களும். கதையின் ஓட்டத்திலிருந்து தனித்து நிற்காமல், அழகாக வசனம் போலவே கதையுடன் இணைந்து நகர்கின்றன பாடல்கள். ஜானி டெப் உள்ளிட்ட கலைஞர்கள் யாரும் பாடகர்கள் இல்லையென்றாலும், அவர்களே பாடியிருப்பதும், தொழில் முறை பாடகர்கள் போல் அவர்கள் பாடியிருக்கும் விதமும் வியக்க வைக்கின்றன. Dark humour வகையிலான நகைச்சுவை படம் முழுதுமே இரசிக்க வைக்கிறது. வஞ்சத்தின் சக்கரம் சுழன்று முடியும் இறுதிக்காட்சி, படத்திற்கு பொருத்தமான முடிவு.

கொசுறு :
1. Borat படத்தில் நடித்த Cohen, ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
2. மீரா நாயர் இயக்கத்தில் படமாக்கப்பட்டு வரும் 'ஷாந்தாராம்' திரைப்படத்தில், இதே ஜானி டெப்பும், ஹெலெனாவும் இணைகிறார்கள். (இதில் முக்கிய பாத்திரங்களில் அமிதாப்பும், பிபாஷாவும் கூட உண்டு :-) )

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது