Before Sunrise (1995) and Before Sunset (2004)

Movie(s) : Before Sunrise (1995) & Before sunset (2004)
Cast : Ethan Hawke, Julie Delpy
Director : Richard Linklater
அமெரிக்கனான ஜெஸ்ஸியும், ஃப்ரென்ச் பெண்ணான செலீனும் ஒரு இரயில் பிரயாணத்தின் போது எதேச்சையாக சந்திக்கிறார்கள். பாரீஸுக்கு செல்ல வேண்டிய செலீன், வியன்னாவில் ஜெஸ்ஸியுடன் இறங்கி ஒருநாள் ஊர் சுற்ற ஒப்புக்கொள்கிறாள். One Night Stand என்று அறியப்படும் ஒருநாள் உறவாக இருவரும் வியன்னாவை சுற்றிப் பார்க்க கிளம்புகிறார்கள். அன்றைய ஒருநாள் கதைதான், Before Sunrise. இதுவரை நான் பார்த்த Romance திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துவிட்ட இது பிடித்த திரைப்படங்களில் ஒன்றாக எப்பொழுதும் இருக்கும்.
எத்தனையோ அழகான கதாநாயகிகளை நாம் படங்களில் பார்த்தாலும், சில படங்கள் மட்டும் முடியும் வேளையில் அதன் நாயகியை நாம் காதலிக்கத் தொடங்கியிருப்போம். அது அவர்களின் அழகினால் அல்ல, அந்த பாத்திரப்படைப்பினால். அப்படிப்பட்ட ஒருவள், செலீன். படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நாம் செலீனை ரசிக்கத் தொடங்கி விடுகிறோம். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு வியன்னா நகர வீதிகளில் இந்த ஜோடியின் உரையாடலை பின் தொடர்கிறது, இப்படம். ஆனால் வேறு பெரிய கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாததோ, திருப்பங்களோ, கதையோ இல்லாததோ, படம் முடியும் வரை நமக்கு தெரிவதே இல்லை.
ஜெயிப்பது, தோற்பது எல்லாவற்றிற்கும் அப்பால், சில பேரை பார்க்கையில் நமக்கானவன்/ள் இவன்/ள்தான் என்று தோன்றும். எல்லோராலும் நினைத்தவர்களை சேர முடிவதில்லை என்பது ஒருபுறம். ஆனால், சிறிது காலத்திற்கு பிறகு, நமது தேர்வு சரியானதுதானா என்ற குழப்பம் வந்தால்? ஒருவனுக்கு ஒருத்தி, பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் போன்றவை நிறைந்த நமது சமுதாயத்தில் இது போன்ற குழப்பங்கள் அதிகமில்லை (அல்லது சமூக கட்டுப்பாடுகளினால் இவை மறைக்கப்படுகின்றன). ஆனால் பிடித்தவர்களை தானே தேர்ந்தெடுத்து வாழும் மேற்கத்திய நாகரீகத்தில் இது போன்ற சிக்கல்கள் நிறைய. அத்தகைய சந்தர்ப்பங்களில், இது போன்ற ஒருநாள் உறவுகள் வாழ்நாள் முழுவதும் மனதில் தங்கிவிடுவதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெஸ்ஸியும், செலீனும் சொல்வது போல, ஒருவேளை சேர்ந்திருந்தால் சிறிது நாட்களில், ஒருவரை ஒருவர் வெறுத்திருக்கக்கூடும். ஆனால் திறக்கப்படாத கடிதமாகிவிடுவதில்தான் இருக்கிறது இத்தகைய உறவுகளின் கவிதை.
என்னுடன் இங்கேயே இறங்கி விடுகிறாயா என்று இரயிலில் கேட்கும் ஜெஸ்ஸியின் முதல் சந்திப்பிலிருந்தே மிகவும் சுவாரசியமாக செல்கின்றன வசனங்கள். அடுத்தவர் பார்க்காத பொழுது ஒருவரையொருவர் பார்ப்பதும், அவர்கள் பார்க்கும்பொழுது வேறுபுறம் பார்ப்பதுமான காட்சி உட்பட, இருவருக்கும் மெல்ல மெல்ல காதல் அரும்பும் காட்சிகள் அனைத்தும் அழகு. 'அரும்பும்' என்பது சம்பிரதாய வார்த்தையாக அல்லாமல் உண்மையாகவே காதல் அரும்புவதை நாம் உணர முடிகிறது. பாசாங்கில்லாத வசனங்களுக்கு இடையே வரும் மிகவும் இயல்பான நகைச்சுவை கோர்க்கபட்டதாக இல்லாமல் பாத்திரங்களின் தன்மையை சொல்வதாயும் இருக்கிறது. மறுபிறப்பு பற்றி விவாதிக்கும்பொழுது "நாம் எல்லோருமே மறுபடி,மறுபடி பிறந்தவர்கள் என்றால், மக்கட்தொகை எப்படி அதிகமாகிறது' என்று ஜெஸ்ஸி கேட்பது மற்றும் ஜெஸ்ஸியை பிடித்திருக்கிறது என்பதை சொல்ல செலீன் செய்யும் ஃபோன் ('வாலி' படத்தில், ஜோதிகா, அஜீத் 'ட்ரிங், ட்ரிங்' காட்சி நியாபகமிருக்கிறதா? இதிலிருந்து சுட்டதுதான் :-) ) என பல காட்சிகள் குறிப்பிட்டு சொல்லலாம்.
Before Sunrise - ன் sequel-ஆக 2004-ல் வந்த படம், Before Sunset. இது போல் அடுத்த பகுதியாக பல படங்கள் வந்தாலும், சில படங்கள்தான் முதல் பகுதியை போலவே வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் பார்த்தால், கொஞ்சம் வயது கூடியதில் முதிர்ச்சியடைந்திருக்கும் ஜெஸ்ஸியையும், செலீனையும் போலவே Before Sunset-ம் முதல் பகுதியை விட அழகாகவே இருக்கிறது. இதே இடத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு சந்திப்போம் என்று இருவரும் பிரியும் இடத்தில் முடியும் முதல் பகுதி, ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சதிப்பதில் இரண்டாவது பகுதியாக தொடர்கிறது.
இப்படிப்பட்ட படங்களை பார்க்கும் பொழுது இருவரும் சேர வேண்டும் என்று நமக்கு தோன்றுவதுதான் வாடிக்கை. ஆனால், முதல் பகுதியின் முடிவு பிடித்திருந்த எனக்கு அதுதான் படத்தின் கரு என்று தோன்றியது. இரண்டாவது பகுதி என்று அதை கெடுத்து விடுவார்களோ என்று பயந்துகொண்டே பார்த்தபின் இரண்டாவதின் முடிவு இன்ப அதிர்ச்சி. இந்த படத்தின் இறுதிக்காட்சி இதைவிட அழகாக, இதைவிட சரியான தருணத்தில் முடிவது சாத்தியமே இல்லை. ஜெஸ்ஸிக்காக செலீன் பாடும் அந்த பாடலில் முடிவில் நமக்கும் கண்கள் பனிக்கின்றன.
Ethan Hawk மற்றும் Julie Delpy -க்கு இடையேயான chemistry படத்தின் மிகப்பெரிய பலம். வெறும் இருகதாபாத்திரங்களுக்கிடையேயான வசனங்களில் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கும் Richard Linklater- ன் திரைக்கதையும், இயக்கமும் குறிப்பிடப்பட வேண்டியாதாகும். இது வழக்கமான ஹாலிவுட் ரொமான்ஸ் திரைப்படம் இல்லை. பார்க்காதவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.
0 comments:
Post a Comment